வெளிச்சம் பரவட்டும் ஈசிசேர், நினைவுகள் 56,துறவு
மரினா என்ற மலையாளத் திரைப்படம் பார்த்தேன். அதில் மரினாவாக நடிப்பவர் ஒரு கல்லூரி மாணவி. கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் அவர் ஒரு செல்வந்தரின் ஒரே மகள். அழகானவர், பாட்டு, படிப்பு எல்லாவற்றிலும் முதன்மையாக இருக்கிறார், எல்லாவற்றையும் விட மற்றவர்களுக்கு உதவும் எண்ணம் அவருக்கு அதிகமாக இருக்கிறது. எல்லா நண்பர்களுடனும் நன்றாக கலகலப்பாக பழகுகிறார். எப்போதும் முகத்தில் புன்சிரிப்பு தான் .அவரை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது .அந்த கல்லூரியில் படிக்கும் போது மாணவிகளும் சரி, அங்கு வேலை பார்க்கும் சிஸ்டர்ஸ் ஆக இருந்தாலும் சரி எல்லோருமே அவரிடம் அன்பு காட்டுகிறார்கள். இந்நிலையில் திடீரென்று அவரது தந்தைக்கு மாரடைப்பு ஏற்படவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார் .அப்போது அவருக்கு ஒரு டாக்டர் சிகிச்சை அளிக்கிறார். ஓரளவு அவருக்கு குணமாகிவிட்டது. ஆனால் படுத்த படுக்கையாக மாரடைப்பு ஏற்பட்ட போது மனைவியை இழுந்த மெரீனாவின் தந்தை இனி நாம் காலம் தாழ்த்தாமல் தனது மகளுக்கு ஒரு திருமணத்தை முடித்து விட வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அப்போது அவருக்கு சிகிச்சை அளித்த அந்த டாக்டரை யார் என்று வினவுகிறார் .அந்த டாக்டர் தன் கதையை சொல்கிறார். தான் ஒரு அனாதை என்றும தனது அப்பா வின் செயலால் தனது அம்மா தற்கொலை செய்து கொண்டதாகவும் தான் அனாதை கிறிஸ்தவ இல்லத்தில் தங்கி படித்து டாக்டர் ஆனதாகவும் சொல்கிறார்.இவைகளை வியப்புடுடன் பார்க்கிறார் மரினா. பிறகு வீட்டுக்கு சென்று விடுகிறார்கள் . தந்தைக்கு வீட்டுக்கு சென்ற முதல் தனது மகளுக்கு திருமணம் செய்து வைப்பது என்று முன்னேற்பாடு செய்கிறார். அப்போது அவரது மகள் தனக்கு இப்போதுது திருமணம் தேவையில்லை என்று சொல்லி விடுகிறார். பெற்ற மகளின் மீது உயிரையே வைத்திருக்கும் தந்தை தொடர்ந்து அந்த நடவடிக்கையில் ஈடுபடுகிறார். மெரீனாவின் தாத்தாவும் பாட்டியும் கூட வெளியூரிலிருந்து வந்திருக்கிறார்கள். அவர்கள் எல்லோர் முன்னிலையிலும் தான் திருமணம் செய்து கொள்ளாமல் கன்னியாஸ்திரி ஆக செல்வதாக சொல்கிறார் .அவரது பேச்சைக் கேட்டு அவரது தந்தைக்கு மிகவும் அதிர்ச்சி ஏற்படுகிறது. தான் உயிர் குயிரான தனது செல்ல மகள் திருமணம், குடும்பம் என்று ஆகி பிள்ளைகளை பெற்று வளமாக வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டது எல்லாம் ஒரு நொடியில் தகர்ந்து விட்டது. இந்த ஏமாற்றத்தை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. போகப் போக பலராலும் மரினாவுக்கு அறிவுறுத்தப்படுகிறது. கன்னியாஸ்திரி ஆக போவது என்பது அவ்வளவு சுலபம் அல்ல என்று எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால் அவர் ஒரு முடிவு எடுத்து விட்டார் .அந்த முடிவு அதை சிரித்துக்கொண்டே சொல்லும் பாங்கு தான் அழகு .தனது தந்தையை அவர் சமாதானம் செய்கிறார் .எப்படி என்றால் உயிர்களிடத்தில் அன்பு செலுத்துவதும் மற்றவர்களுக்கு சேவை செய்வதற்காகவே என்னை இயேசு படைத்தார் அதனால் நான் இயேசுவை திருமணம் செய்து கொள்கிறேன். அங்கு சென்று மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்பதே எனது ஆசை .அதனால் நீங்கள் கவலைப்படாமல் இருங்கள் என்று சொல்ல அதற்கு தந்தை சொல்கிறார், மனைவியற்ற என்னை கடைசி வரை இருந்து நீ என்னை பார்த்துக் கொள்வாய் என்று இருந்தேன். ஆனால் எனது ஆசை எல்லாம் நிராசையாக போய்விட்டது. மேலும் உனக்காகவே நான் இவ்வளவு சொத்துக்களையும் சேர்த்தேன், இதை எல்லாம் விட்டு நீ செல்கிறேன் என்கிறாயே என்கிறபோது அவர் ஒரு காரியம் செய்வார் . இருங்கள் என்று சொல்லிவிட்டு மேலே சென்று தனக்கு இதுவரை கொடுக்கப்பட்ட நகைகள் விலை உயர்ந்த பொருட்கள் அத்தனையும் எடுத்து வந்து தனது தந்தை கையில் ஒப்படைப்பார். நான் கன்னியாஸ்திரி ஆக போய்விட்டால் எனக்கு இதெல்லாம் தேவைப்படாது, ஆகவே இது எல்லாம் மற்றவர்களுக்காக செலவு செய்யுங்கள் என்பது போல் சிரித்த முகத்துடன் கொடுத்து விடுவார். ப பெற்ற தந்தையின் மனநிலை எப்படி இருக்கும் என்று யோசித்து பாருங்கள். ஆனாலும் தாங்கிக் கொள்கிறார் . அந்த டாக்டர் மரினாவை சந்தித்து தனது காதலை சொல்கிறார். அவரிடமும் தனது முடிவை சொல்லி எனக்கு உதவுங்கள் அண்ணா என்று சொல்கிறார். மேலும் சில நாட்கள் கடக்கிறது தனது முடிவை அந்த கான்வென்ட் தலைமை இடத்தில் போய் சொல்கிறார். அவர்களும் அறிவுரை கூறுகிறார்கள் .கொஞ்ச நாள் இங்கே இருங்கள் மற்றவரோடு சேர்ந்து சேவை செய்யுங்கள் பிறகு பார்க்கலாம் .நீங்கள் ஒரு பக்குவம் அடையும் வரை பார்க்கலாம். அதுவரை நீங்கள் சாதாரணமாக எங்கள் கான்வென்ட்க்கு வந்து செல்லுங்கள் என்று சொல்கிறார்கள். இந்த கதாநாயகி மரீனா அந்த கான்வென்டில் தங்கி சிறு சிறு வேலைகள் எல்லாம் செய்ய கற்றுக் கொள்கிறார். ஒரு கோடீஸ்வரன் மகள் தரையைத் துடைப்பதும் அங்கு சுத்தம் செய்வதும் . பல பணிகளில் தானாகவே ஒரு மிக்க ஆர்வத்துடன் ஈடுபடுகிறார். இதுபோல் கொஞ்ச நாள் சென்ற பிறகு அவருக்கு பயிற்சிகள் தீவிரமாக்கப்படுகிறது எல்லாவற்றிலும் கடந்து வந்து விடுகிறார். கடைசியில் எல்லா தேர்வுகளிலும் வெற்றி பெற்று அவர் கன்னியாஸ்திரி பட்டம் பெற போகிறார். இந்த நேரத்தில் அவர் தந்தையே தன்னை மாற்றிக் கொண்டார் .அதற்கான விழா எடுக்கும் வேலைகள் நடக்கிறது. அப்போது அவர் வாழ்ந்த அவருடைய வீட்டுக்கு கடைசி முறையாக வந்து செல்லும் காட்சி. நண்பர்கள் உறவினர்கள் அனைவரும் வந்துள்ளனர். கன்னியாஸ்திரி உடையில் அவர் தனது வீட்டுக்குள் நுழைய ஒரே நிசப்தம். சற்று நேரத்தில் அவருடைய கோலத்தை காண சகிக்காமல் கண்ணீர் வடிக்கிறார்கள். ஆனால் அந்த நேரத்திலும் புன்னகை மாறாமல் மரினா அவர்களுக்கு ஆறுதல் சொல்கிறார். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை வந்து சந்திக்கலாம் என்று சொல்லிவிட்டு தனது தந்தையிடம் கடைசியாக விடைபெறுகிறார். அவரும் அமைதியாக விடை கொடுக்கிறார். ஒரு தோளில் மாட்டிய பையோடு அவர் வீட்டை விட்டு வெளியே போகிறார் .அவரது அப்பா நான் உடன் வரவா என்று கேட்க வேண்டாம்ப்பா நான் போய் விடுவேன் என்று ஒற்றை ஆளாக வெளியே போகிறார். மரினாவாக நடித்தவரை குறிப்பாக சொல்ல வேண்டும் பெயர் எனக்கு நினைவில்லை. அழகு ,அறிவு திறமை , முகத்தில் குடி கொண்டிருக்கும் அமைதி புன் சிரிப்பு இவ்வளவும் அந்த 16 வயது பெண்ணுக்கு இருக்கிறது. இப்படிப்பட்ட ஒருவர் கன்னியாஸ்திரி ஆக போக முடிவெடுத்தார். படத்தில் அவரும் அவரது அப்பாவும் சேர்ந்து தோன்றும் காட்சிகளில் கதறி அழும் அவரது தந்தையை எவ்வளவு மென்மையாக சமாதானம் செய்கிறார் .படம் முழு வதும் என்னால் பார்க்கவே முடியவில்லை. கண்ணீர் திரையிட்டு மறைத்தது. இப்போதும் கூட இதை எழுத முடியவில்லை .என்னால் தாங்கவே முடியவில்லை . பிளைகள் மீது வைக்கும் அளவற்ற பாசம் நம்மை ஏமாற்றி விடும். ஆகவே அளவோடு பாசம் வைக்க வேண்டும். அவர்களுக்கு அறிவை ஊட்ட வேண்டும். பிள்ளைகள் தன்னிச்சையாக நடக்கலாம் ஆனால் அது நல்ல வழியில் நடந்தால் நாம் சந்தோஷப்படுவோம், மரினாவின் தந்தையைப் போல. பிள்ளைகள் பாதை மாறிவிடுமோ என்ற பயத்தில் தான் ஒவ்வொரு தந்தையும் பெற்றோர்களும் கவலை கொள்கிறார்கள் .ஆனாலும் இதுபோன்று சில குடும்பங்களில் தங்களது வறுமை காரணமாக யாராவது ஒருவரை கன்னியாஸ்திரி ஆக ஆக்குவது எங்கள் ஊரிலும் நடக்கிறது. நிறைய குடும்பங்களில் இது போல் ஆகி இருக்கிறார்கள் .ஆனால் ஒரு செல்வந்தரின் மகள் சகல குணங்களும் உடைய ஒரு அழகி கன்னியாஸ்திரி ஆகப்போவது என்னவோ என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவரது தந்தையே ஒத்துக் கொண்டாலும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது அவரது தந்தை கூட உடன் செல்லவில்லை நான் மட்டுமே சென்றேன் . எங்கிருந்தாலும் வாழ்க சிஸ்டர் மரினா
தாமரை இலை ..........
ReplyDeleteஉங்கள் மீதான தாக்கம் எவ்வளவு,எப்படி இருந்திருக்கும் என்பது நன்கு புரிகிறது.
ReplyDeleteநீங்கள் படம் பாருங்கள் சார்
ReplyDelete